இரவியின் கையெழுத்து - காலம் நமக்கொரு பாட்டெழுதும்!
இரவி பரமேஸ்வரி
துக்கத்தின் மேகம் தொடர்ந்து பரவுகிறது. இலவம் பஞ்சு பறந்தாற் போல துக்கம் என் மேலும் அயலிலும் பறக்கிறது. வாழ்வின் எந்தக் கூறுகளையும் அடைய விடாதபடி, துக்கம் என்னை வேலியிட்டுக் காவல் காக்கிறது. கூவமுடியாத குயிலின் கேவல் போல துக்கம் என்னிலிருந்து பீறிடுகிறது. மேலும் எந்த வாக்கியமும், என் துக்கத்தை ஏந்திவர வலுவிழந்து கிடக்கிறது.
அனைத்தும் அழிந்து ஒரு வருடமாகிறது. இந்த ஒரு வருடமும் நாங்கள் ஒப்பாரியே பாடினோம்.
'உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் வாடுகிறார்கள்' - என்ற வரிகள் சில்வண்டின் இரைச்சலாகக் காதைக் குடைகிறது.
'கட்டிடம் ஜொலிக்கிறது
அத்திவாரம் அழுகிறது' - என்ற வரிகளும் இன்னொரு சில்வண்டு.
இனியொரு வெற்றியே இல்லையோ என்ற வெப்பியாரம் என்னைக் குப்புற வீழ்த்துகிறது. மேலாக எங்கள் உரிமைப் போரின் கூர் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. நாம் இனி, ஒன்றுக்கும் உதவாமல் தந்ததை வாங்கி உண்ணும் பிச்சைக்காரராக இருக்க வேண்டியதுதான். யாரோடு நோகலாம்? யார்க்கெடுத்துரைக்கலாம்?
இவ்வேளையில்தான் பொதுத் தேர்தல் ஒன்று வந்து எஞ்சியிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் சிதறடித்தது. இனி தாயகம், தேசியம், தன்னாட்சி என்று கதைக்க யாருமில்லை. இறைமை என்ற சொல்லை இலங்கைக்குள் ஈழத்தமிழரால் தேடிக் கண்டடைய முடியாது. இந்திய வல்லாதிக்கத்திற்கு உணர்வையும், உரிமைகளையும் விற்றுவிட முதலை கணக்காய் வாய் பிளந்து காத்திருக்கிறது சம்பந்தர், சுரேஸ் அணி. இனி அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் பேசித் தீர்ப்பம் என்பார்கள். தமிழர் உரிமை என்பார்கள் பீற்றித் திரிவார்கள்.
பொதுத் தேர்தல் வந்தவுடனோ தமிழர் ஒற்றுமை என்பார்கள். தாயக சுதந்திரம் என்பார்கள். எமது முட்டாள் மக்களும் என்ன செய்வார்கள்? ஒற்றுமை. ஓம் ஒற்றுமை என்ற ஒரு சொல்லைப் பற்றிப் பிடிப்பார்கள். அதற்கப்பால் எதனையும் பார்க்கார். அதற்கு ஒத்து ஊதுவார் சில ஊடகவியலாளர். யாவரினதும் எண்ணம் அரசியலில் தாங்கள்தாம் அதிமேதாவிகள் என்பது.
இருந்து பாருங்கள் - இவ்வுளவும் நிகழும். அடுத்த பொதுத் தேர்தல் வரையும் சிறு துரும்பும் அசையாது. மறந்து போயும் இவர்கள் வாயிலிருந்து இவ்வுளவு காலப் போராட்டம் பற்றி ஒரு சொல்லும் வராது. இன்னும் சொன்னால் 'தமிழீழ விடுதலைப் புலிகளா? யார் அவர்கள்?' என்றும், வேலுப்பிள்ளை பிரபாகரனா – எவன் அவன்?' என்றும் மனசில் சொல்லியவாறு மறந்தும் இவர்கள் பெயர் உச்சரிக்கமாட்டார்கள். இருந்து பாருங்கள். இது நிகழும். எப்படி இவ்வுளவு உறுதியாகச் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? அனுபவம் அய்யனே, அனுபவம். ஒரு வருசம், இரண்டு வருசம் அல்ல. முப்பது வருசம். முழுதான முப்பது வருசம். அது தந்த அனுபவம்தான் இவ்வளவற்றையும் தெளிவாகச் சொல்ல வைக்கிறது.
'பதினாறு வயதினிலே' என்ற தலைப்பில் 77 பொதுத் தேர்தலில் என்ன செய்தேன் என்று ஏலவே எழுதிவிட்டேன். 'நேராக நின்றவனின் துக்கம்' எனும் தலைப்பில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் என்ன நிலைப்பாடு எடுத்தேன் என்பதையும் சொல்லி விட்டேன். இடையில் சில காலம் என் பணிகள் என்ன என்பதைச் சொல்லாமல் விட்டேன். மறந்தேனல்லன். கைகூடி வரவில்லைக் காலம்.
1977 பொதுத் தேர்தலின் பின் அமிர்தலிங்கம் ஆட்கள் மீது ஏற்பட்ட விரக்தியும், சீனக் கொம்மியுனிஸ்ட் கட்சியுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்புகளும் நாடாளுமன்றத் தேர்தல் பகிஸ்கிப்புக்கு உரியது என்றே எண்ண வைத்தது. 'துப்பாக்கிக் குழலிலிருந்து அதிகாரம் பிறக்கிறது' என்ற தோழர் மாவோவின் வரிகள் ஆயுதப்போராட்டமே அனைத்துக்குமான தீர்வு என்று உலக்கை இடியாக ஓங்கிப் பதிந்தது.
ஆனால் அதுகூட அதிக காலம் எடுக்கவில்லை. அதே தோழர் மாவோவின் அலைவரிசையில் வந்த 'புதிய ஜனநாயகப் புரட்சி' என்ற புதிய கோசம் சிறு கல்லைப் பெயர்த்தது போல் என்னைப் பெயர்த்தது. அந்தப் பிரவாகத்தைத் தந்தவர் தோழர் விசுவானந்ததேவன். 'அங்குலம், அங்குலமாகவென்றாலும் ஆழ முன்னேறுவோம்' என்றதை நிலவெறிந்த இரவு யாழ்தேவியின் படிக்கட்டில் பளை ரயில் நிலையத்தை அண்மிக்கின்ற போது சொன்னார். இரண்டு ரூபாவுக்கு கடலைக் கொட்டை வாங்கி கீரிமலை வலித்தூண்டல் கடற்கரையில் கடற்காற்று குபுகுபுவெனப் பெருகச் சொன்னார். கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தில் இறங்கி, இரணைமடுக்குளம் தாண்டிய காட்டுப் பாதைக்குள் வைத்துச் சொன்னார். இன்னும் சொன்ன இடங்கள் ஏராளம். சைக்கிள் பாரில் இருந்து நெடுகச் சொன்னார்.
ஆயிற்று 1981ஆம் ஆண்டு. தமிழர் விடுதலைக் கூட்டணி மீதும், அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் மீதும் எஞ்சிய எந்தத்துளி நம்பிக்கையும் இல்லை. 'ஓம், உன் அவநம்பிக்கை சரி' என்று மாவட்ட அபிவிருத்தி சபை என்ற ஜே.ஆர் சரியச் சரியக் கட்டிவிட்ட தலைப்பாகையுடன் வந்தார் அமிர்தலிங்கம். அட ராமா, தமிழீழம் கேட்கப் போனவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபை என்ற மாயமானுடன் வந்திருக்கிறோமே என்று எந்த வெட்கமும் இல்லை. எல்லாக் காலங்களும் மேடை ஏறவும், மைக் பிடிக்கவும், கொடி பறக்க காரில் பறக்கவும், வாக்குப் பிச்சைக்குக் கும்பிடு போடவும் அவர்களுக்கு விதி வந்து விடுகிறது. அந்தச் 'சின்ன மேளங்களுக்கு' திருவிழாக்கள் எப்போதும் காத்திருக்கின்றன.
'பெரிய தேர்தல் சிறிய தேர்தல்
குட்டித் தேர்தல் குஞ்சுத் தேர்தல்
ஓன்று முடிய இன்னொன்று
எந்த நாளும் திருவிழாத்தான்'
என்று ஒரு நாடகப் பாடல் வரும். அதுவும் நாங்கள் போட்ட 'திருவிழா' நாடகம் தான். அது பற்றிப் பிறகு சொல்கிறேன். அந்த நாடகப் பாடலுக்கு இசைய இருந்தது அவர்கள் நடத்தை.
அப்போது நாங்கள் புதுசு என்ற சஞ்சகை நடாத்திக் கொண்டிருந்தோம். அது உண்மையில் சிறுபிள்ளை வேளாண்மை. ஆனால் வீடு வந்து சேர்ந்தது. 'புதுசு' இரண்டாவது இதழில் 'மாவட்ட அபிவிருத்தி சபையும், மயக்கங்கள் சிலவும்' என்று 'புதுசு' வின் சார்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டது. அதனை இப்பொழுது வாசிக்கின்ற போது அது சிறுபிள்ளை வேளாண்மை தான் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். ஆனால் அது உண்மை பேசியது. 'சின்னவாய்' பேசும் உண்மை பெறுமதி மிக்கது. ஆனால் எருமைத் தோல்களை அது உறுத்தாது.
உறுத்தும் ஒன்றையும் செய்தோம். அது 'திருவிழா' என்ற நாடகம். தோழர் விசு அதன் அத்திவாரம் போட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பேராசையையும், மாவட்ட அபிவிருத்தி சபை தில்லு முல்லுகளையும் அம்பலப்படுத்த வேண்டும் என்பது தோழர் விசுவின் ஓராசை. அது அரசியல் தேவையும் கூட என்றார் அவர். ஏற்கெனவே நாடகம் எழுதி அனுபவப்பட்ட மாவை நித்தியானந்தன் அவர்களை பிரதி எழுதித் தரும்படி கேட்டார் தோழர் விசு.
'தேர்தற் திருவிழா' என்று பெயர் வைத்து மாவை நித்தி பிரதி தந்தார். 'தேர்தல்' என்ற சொல்லை வெட்டினேன். அது வெளிப்படையாகச் சொல்கிறது. 'திருவிழா' போதும். தோழர் விசு பிரதியினைத் தந்து என்னை இயக்கச் சொன்னார். அது குருவி தலையில் பனங்காய். அப்போது எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆதவனண்ணர் (க.ஆதவன்). 'அவரைப் போடலாமே?' என்றேன் தோழர் விசுவிடம். 'ஓமெடப்பா போடலாம் தான்' என்று இழுத்தார். அந்த இறப்பர் இழுவைக்கு நான் விடவில்லை. 'போடுங்கோ மிச்சத்தை நான் பாக்கிறன்.'
வெறும் மிச்சத்தை அல்ல, பெரும் பகுதியான 'மிச்சங்களை' நான் பார்க்க வேண்டியதாயிறு;று. அதன் காரணம் ஆதவனண்ணரின் பொறுப்பற்ற தனம். ஆனால் 'கொள்கை முரண்பாடு' என்றார் ஆதவனண்ணர். தாளலய வடிவிலான இந்நாடகத்தை அளவெட்டி படைப்பாளிகள் வட்டம் தயாரித்தது.
1981ஆம் ஆண்டு விஜயதசமி பூசை அன்று அளவெட்டி சீனக் கலட்டி ஞானோதயா வித்தியாசாலையில் முதல் மேடையேற்றம். முப்பது மேடையேற்றம் முடித்து அதே சீனக் கலட்டி பள்ளிக்கூடத்தில் மகாகவி நினைவு விழாவன்று இறுதியாக மேடையேற்றினோம். அது 1983 யூன் மாதம். அதன் பிறகு யூலை இனப்படுகொலை நிகழ்ந்தது. புதுசுவில் எழுதினேன்.
'நாம் எல்லாவற்றையும் மறந்து விடுவோம். மன்னித்தும் விடலாம். ஆம். நாம் முன்னர் தொட்டு அதனையே செய்து கொண்டிருந்தோம். குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருந்தோம். இறுதியில் இறந்து போனோம். எங்களை எரிக்கலாம். அல்லது புதைக்கலாம். ஆக, இறுதியில் தேடிய போது மயானம் கூட எங்களிடம் இல்லாமல் போனது. உங்களிடம் இவை கூறும் செய்திதான் என்ன?'
இதனை வாசித்துவிட்டு பருத்தித்துறையில் இருந்து புதுசுவிற்கு தொடர்ந்து கடிதம் எழுதுகிற புதுசிவகுமார் எழுதினார். 'உங்களது செய்தி எனக்கும் உரிய செய்தியானது. நான் போகிறேன். என்னிடமிருந்து உங்களுக்கு இனி கடிதம் வராது. வேறு செய்திகள் வரலாம். வணக்கம் வருகிறேன்.'
சிவக்குமாரே அப்படிப் போனால் இதை எழுதிய நாங்கள் சும்மா இருப்போமா? அப்போதிருந்து அடுத்த வாழ்வு கல்லிலும், முள்ளிலும், காட்டிலும், மேட்டிலும், கடலிலும், கரையிலும்...........! இதைப்பற்றி வேறென்ன விளம்ப? இதனிடையே 'திருவிழா' நாடகத்தை பிறகெப்படி மேடையேற்ற,
'திருவிழா' நாடகம் சொன்ன செய்தி தான் என்ன?
'அடிபட்டோம் மிதிபட்டோம்
உதைபட்டோம் வதைபட்டோம்
உங்களுக்கு உரிமை கேட்டு
சிறை கூடச் சென்றுள்ளோம்
எங்களுக்கு வாக்களிப்பீர்'
என்று தமிழ்த் தலைமை, வடக்குக் கிழக்கில் 'நாட்டைப் பிரி நாட்டைப் பிரி' என்று கத்திய தமிழ்த் தலைமை, கொழும்பில் சிங்களத் தலைமைக்கு முன்னே
'சும்மா தான் கத்துகிறோம்
பிள்ளை குட்டிக்காரர் நாம்
சும்மா தான் கத்துகிறோம்'
என்று பம்மாத்துப் பண்ணுகிற அரசியலைச் சொன்னது. இதில் தமிழ்த் தலைமைக்கு அமிர்தலிங்கம் போலப் பாவனை செய்து நான் நடித்தேன்.
தமிழ்த் தலைமையின் பிச்சை கேட்கும் கெஞ்சுதலைப் பார்த்து சிங்களத் தலைமை கிள்ளிக் கொடுக்கும்.
'கொண்டு போங்கள்
மாவட்ட சபைகள்
கொண்டு போங்கள்'
முப்பது தடவையும் மேடை ஏறிய போது முப்பது வித அனுபவங்கள். அளவெட்டி, மயிலிட்டி, ஊறணி, கொழும்புத்துறை, இளவாலை, கரவெட்டி, நெல்லியடி, உரும்பிராய், பொலிகண்டி, காரைநகர், புங்குடுதீவு, கிளிநொச்சி, பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, இணுவில், கோண்டாவில் என இன்னும் பெயர் மறந்த ஊர்கள்.
பொலிகண்டியில் கல்லெறி வீழ்ந்தது. கரவெட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பார்க்கிறார் என்ற குசுகுசுப்புக் கதை காதினுள் வந்தது. அன்று நாடகம் வேறெங்கிலும் பார்க்க இன்னொரு பரிமாணம். கிளிநொச்சி ரொட்ரிக்கோ மைதானத்தில் 1983 மேதினத்தன்று பொலிஸாரின் அனுமதி மறுப்பால் 'திருவிழா' உடனடியாக வீதி நாடகமாயிற்று. அதாவது ஈழத்தமிழரின் முதலாவது வீதி நாடகம் 'திருவிழா' ஆயிற்று. புங்குடுதீவில் நாடகம் போட்டு முடித்து வருகிற மூன்று மணி விடியப்புறத்தில் மருதனாமடத்தில் சிங்கள இராணுவம் ஆடவைத்ததில் அது முப்பத்தொராவது மேடையேற்றம் என்றும் சொல்லலாம்.
ஏன்னவோ, முப்பது வருடத்துக்குள் முழுதாகச் சுற்றி வந்துவிட்டோம். மீண்டும் 'திருவிழா' நாடகம் போடுகின்ற சந்தர்ப்பம் வந்திருக்கின்றது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
ஆயினும் நம்புகிறேன். காலம் நமக்கொரு பாட்டெழுதும். தாளம் தவறியோ இராகம் இடறியோ, நான் செத்துப்போயோ, இன்னும் முப்பது வருடங்கள் முடிந்து போயோ, ஈழத்தமிழர் வாழ்வு முற்றுப்பெற முன்னர் காலம் நமக்கொரு பாட்டெழுதும்.